இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமிக்கபப்ட்டுள்ளார்.
நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வியாழக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளராகப் பணியாற்றிய எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை இந்தப் பதவிக்கு நியமிப்பதற்கு பெப்ரவரி 03 ஆம் திகதி கூடிய அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர்
இதற்கு முன்னர் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றிய சூலந்த விக்ரமரத்ன ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு,தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிக் கணக்காய்வாளரான எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ஜயரத்ன, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலை (சிறப்பு) பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றுள்ளதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் அரச நிதி கணக்காளர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.இந்நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண், ஜயரத்ன என்பதும் குறிப்பிடத்தக்கது.