போலி இணைய இணைப்புகள் மூலம் பெண்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு !!!

Author
0

இளம் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி அந்தரங்க காணொளிகளை கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (25) உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலையான காவல்துறை உதவி பரிசோதகர் இது குறித்துத் தெரிவிக்கையில், சந்தேகநபர் கடந்த மூன்று ஆண்டுகளாக இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

போலி இணைய இணைப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத முறைகளைப் பயன்படுத்தி பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்குள் ஊடுருவி, அங்கிருந்த அந்தரங்க காணொளிகளை பதிவிறக்கம் செய்துள்ளார்.

பின்னர், வட்ஸ்அப் ஊடாகப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அந்த காணொளிகளை அனுப்பி, மேலும் சில அந்தரங்க காணொளிகளை தருமாறு மிரட்டியுள்ளார்.

அவ்வாறு வழங்கத் தவறினால், ஏற்கனவே தன்னிடம் உள்ள காணொளிகளை இணையத்தில் பகிரப்போவதாக அச்சுறுத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு களுத்துறை மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

அடையாளம் காண முடியாத தொலைபேசி இணைப்புகள் மற்றும் பேஸ்புக், வட்ஸ்அப் போன்ற தளங்களைப் பயன்படுத்தித் திட்டமிட்ட முறையில் இந்த மோசடிகளை அவர் முன்னெடுத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன், சந்தேகநபரின் மனநிலை குறித்த முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்று சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.                                                     

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top