பிரித்தானியாவை எச்சரித்துச் சில மணிநேரத்தில் ஈரானின் பாய்ச்சல்: 4,000 கி.மீ பாயும் ஏவுகணைகளால் லண்டனுக்கும், அமெரிக்காவிற்கும் மாபெரும் அச்சுறுத்தல்!
மத்திய கிழக்குப் போர்ச் சூழலில், தனது இராணுவத் தளங்களை அமெரிக்காவிற்கு வழங்கிய பிரித்தானியாவை ஈரான் எச்சரித்துச் சில மணி நேரங்களிலேயே, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 'டியாகோ கார்சியா' (Diego Garcia) கூட்டுத் தளம் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலானது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் போர்க் கணிப்புகளை முற்றுமுழுதாகத் தலைகீழாக மாற்றியுள்ளதாக (Changes the calculus) சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
4,000 கிலோமீட்டர் பாயும் வல்லமை:
இது குறித்து தோஹா பட்டதாரி ஆய்வுகள் நிறுவனத்தின் விரிவுரையாளரான முஹனத் செலூம் (Muhanad Seloom), அல் ஜசீரா (Al Jazeera) ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். "ஈரானிடம் அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் பாயும் ஏவுகணைகளே உள்ளதாக இதுவரை மேற்கத்திய நாடுகள் நம்பியிருந்தன. ஆனால், 4,000 கிலோமீட்டர்களுக்கும் அப்பால் உள்ள டியாகோ கார்சியா தீவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமையானது, ஈரானின் மறைக்கப்பட்ட மாபெரும் ஏவுகணைப் பலத்தை அம்பலப்படுத்தியுள்ளது" என அவர் தெரிவித்தார்.லண்டன் மற்றும் அமெரிக்காவிற்கு நேரடி ஆபத்து:
மேலும் அவர் எச்சரிக்கையில், "இந்த 4,000 கிலோமீட்டர் தூரம் பாயும் ஏவுகணைகளின் திசையை ஈரான் மறுபக்கம் திருப்பினால், அவை நேரடியாகப் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனை (London) சென்றடையும். இந்த யதார்த்தம், போரில் இணையத் தயக்கம் காட்டும் லண்டனையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது" என்றார்.
அதுமட்டுமன்றி, ஈரான் தனது விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களின் (Space programme) ஊடாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ICBMs) பரிசோதித்திருக்கலாம் எனவும், அவ்வாறான ஏவுகணைகள் நேரடியாக அமெரிக்கப் பிரதான நிலப்பரப்பையே தாக்கும் வல்லமை கொண்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தகவல் பென்டகன் மற்றும் நேட்டோ கூட்டமைப்பிற்குப் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
