சொந்த வீடுகளில் கூட அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பில்லை" – IRGC அதிரடி எச்சரிக்கை; 4 நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது சரமாரித் தாக்குதல்!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படைகளுக்கிடையிலான போர் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) உலக நாடுகளை அதிரவைக்கும் வகையிலான ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் விடுத்த எச்சரிக்கைகளையும், சமாதானம் தொடர்பான சமிக்ஞைகளையும் ஈரான் இதன்மூலம் முற்றாக நிராகரித்துள்ளது.
"எங்கும் பாதுகாப்பில்லை" – ஈரானின் பகிரங்க எச்சரிக்கை
ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட IRGC-இன் குத்ஸ் படை (Quds Force) அறிக்கையில், "எதிரிகளின் மகிழ்ச்சியான நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அமெரிக்கர்கள் இனி உலகத்தில் எந்த இடத்திலும், ஏன் அவர்களின் சொந்த வீடுகளில் கூடப் பாதுகாப்பாக இருக்க முடியாது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய அதியுயர் தலைவர் மற்றும் 48 முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டமைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, இந்தப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
4 நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
ஈரானின் 'காதம் அல்-அன்பியா' (Khatam al-Anbiya) வான் பாதுகாப்புத் தளத்தின் பேச்சாளர், அமெரிக்காவின் முக்கிய இராணுவ இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த உத்தியோகபூர்வ விபரங்களை வெளியிட்டுள்ளார்:
குவைத் (Kuwait): அரிஃப்ஜான் (Arifjan) பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது 12 ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE): அங்குள்ள அமெரிக்காவின் முக்கியக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Command and Control Center) 6 ட்ரோன்கள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இலக்கு வைக்யாப்பட்டுள்ளது.
பஹ்ரைன் (Bahrain): பஹ்ரைனில் எஞ்சியிருந்த அமெரிக்கக் கடற்படை வசதிகள் 6 ட்ரோன்கள் மூலம் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்கக் கூட்டாளிகளுக்குச் சொந்தமான ‘ஏட்டன் நோவா’ (Aten Nova) என்ற எண்ணெய் கப்பல் 2 ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகித் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி?
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் வழங்கிய நேர்காணல்களில், இந்தப் போர் நான்கு வாரங்களுக்குள் முடிவுக்கு வரும் என்றும், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குத் தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல்கள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கையானது, டிரம்ப்பின் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை ஈரான் முற்றாக நிராகரித்துள்ளதைக் காட்டுகின்றது.
