அமெரிக்கத் தளங்கள் எமது நியாயமான இலக்குகளே; ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்தாலும் தப்ப முடியாது" – ஈரானிய வெளிவிவகார அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் அனைத்தும் ஈரானின் நியாயமான இலக்குகள் (Legitimate targets) என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி (Abbas Araghchi) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகளுடனான நேரடி மோதல்:
ஈரானிய அதியுயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டமையின் பாரதூரத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் முழுமையாக உணரவில்லை எனக் குறிப்பிட்ட அராக்ச்சி, ஈரானின் முரண்பாடு அண்டை நாடுகளுடன் இல்லை என்றும், அந்நாடுகளில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளுடனேயே எனவும் தெளிவுபடுத்தினார்.
"அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள், எமக்கு எதிரான நேரடித் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படாவிட்டாலும், அவை எமது இலக்குகளாகவே கருதப்படும். அமெரிக்கப் படையினர் சாதாரண ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்தாலும் அவர்கள் தாக்குதல்களிலிருந்து தப்ப முடியாது," என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பேச்சுவார்த்தையின் பின்னணி மற்றும் குவைத் விவகாரம்:
அமெரிக்காவுடனான ஈரானின் பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கமளித்த அவர், "ராஜதந்திரத்தை ஈரான் நிராகரித்து வன்முறையைத் தூண்டுகிறது என்ற குற்றச்சாட்டைத் தவிர்ப்பதற்காகவே நாம் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்," எனத் தெரிவித்தார். மேலும், அமெரிக்கப் போர் விமானங்கள் குவைத் வான்பரப்பில் வழிமறிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மையாயின், அதற்கான காரணத்தைக் குவைத் அரசாங்கம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஈரானின் இந்தத் தொடர் எச்சரிக்கைகளை அடுத்து, ஜோர்டான் தலைநகர் அம்மானில் (Amman) உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகத் தூதரக வளாகத்திலிருந்து அனைத்து அதிகாரிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது
