"அமெரிக்கப் படைகள் மீது தொடர் தாக்குதல்! - ஈரான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கத் தயார் என எச்சரிக்கை!"
பென்டகனில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்கப் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர், ஈரானுடனான போர்நிறுத்தம் மற்றும் தற்போதைய ராணுவ நிலைப்பாடு குறித்து முக்கிய விளக்கங்களை அளித்துள்ளனர்! 


இரு தரப்புக்கும் இடையே ஹார்முஸ் ஜலசந்தியில் மோதல்கள் நடந்தாலும், ஈரானுடனான போர்நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை எனப் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, வணிகக் கப்பல்கள் மீது 9 முறை துப்பாக்கிச் சூடு நடத்தி 2 கப்பல்களைச் சிறைபிடித்துள்ள ஈரான், அமெரிக்கப் படைகள் மீதும் 10 முறைக்கும் மேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெனரல் டான் கெய்ன் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் பெரும் போரை மீண்டும் தொடங்குவதற்கான எல்லையை இன்னும் எட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கும் "புராஜெக்ட் ஃப்ரீடம்" நடவடிக்கையானது, 'எபிக் ஃப்யூரி' (Operation Epic Fury) ராணுவ நடவடிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், இது வெறும் தற்காப்பு நோக்கிலானது மற்றும் தற்காலிகமானது என்றும் ஹெக்செத் விளக்கம் அளித்துள்ளார். ஈரானின் முற்றுகையை மீற முயன்ற 6 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் அமலில் உள்ளதால், போரைத் தொடர அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை என அமெரிக்கா வாதிடுகிறது. போர் அதிகாரச் சட்டத்தின்படி 60 நாள் கெடு (60-day clock) போர்நிறுத்தத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஈரான் தொடர்ந்து அத்துமீறினால், மீண்டும் போரைத் தொடங்கும் வாய்ப்பு அதிபரிடம் இருப்பதாகவும், அமெரிக்கப் போர் துறை "முழுக்கத் தயாராக, இலக்கைப் பூட்டி காத்திருக்கிறது" (locked, loaded and ready to go) எனவும் ஹெக்செத் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
