மே 12: "போரைத் தொடர டிரம்பிற்கு முழு அதிகாரம்!" 

"பாகிஸ்தான் விமானத் தளங்களில் ஈரானியப் போர் விமானங்களா?" - ஈரானுக்கு அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி கடும் எச்சரிக்கை!"
அமெரிக்க செனட் சபையில் நடைபெற்ற ஒதுக்கீட்டுக் குழு விசாரணையில், அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் நம்பகத்தன்மை, போரைத் தொடர அதிபர் டிரம்பிற்கு உள்ள அதிகாரங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கம் குறித்துப் பல சூடான விவாதங்கள் அரங்கேறியுள்ளன! 


ஈரானிய ராணுவச் சொத்துகளைப் பாதுகாப்பதற்காக, பாகிஸ்தானின் விமான நிலையங்களில் ஈரானிய ராணுவ விமானங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதா என செனட்டர் லிண்ட்சே கிரஹாம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் கூட்டுப் படைகளின் தளபதி டான் கெய்ன் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார். பேச்சுவார்த்தை நடப்பதால் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் கிரஹாம், "இது உண்மையானால், பாகிஸ்தான் ஒரு அமைதி மத்தியஸ்தராகச் செயல்படுவது முரண்பாடானது. நாம் வேறு யாரையாவது மத்தியஸ்தராகத் தேட வேண்டும்," என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
போரை மீண்டும் தொடங்கினால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதலைப் பெற டிரம்ப் நிர்வாகம் பரிசீலிக்கிறதா என செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், போரை மீண்டும் தொடங்கும் முடிவை அதிபர் எடுத்தால், அரசியல் அமைப்பின் 'பிரிவு 2' (Article II) இன் கீழ் அதனைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரமும் அதிபர் டிரம்பிற்கு உள்ளது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை ஈரான் எப்படி இன்னும் தடுக்க முடிகிறது என்ற செனட்டர் டிக் டர்பினின் கேள்விக்கு, கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் விளக்கமளித்தார். பல சிறிய படகுகள் மூலம் உலகப் பொருளாதாரத்தையே ஈரான் பிணைக்கைதியாக வைத்துள்ளதாகக் கூறிய அவர், ஜலசந்தியைத் திறக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், "தங்கள் அடுத்த நகர்வுகள் குறித்து ஈரான் புத்திசாலித்தனமாகச் சிந்திக்க வேண்டும்" எனவும் எச்சரித்துள்ளார்.
