முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு பன்னாடுகளிடம் நீதிகோரிய ரவிகரன் எம்.பி

Author
0

 முள்ளிவாய்க்கால் தமிழ் படுகொலை இடம்பெற்று 17ஆண்டுகள் ஆகியுள்ளபோதும், இதுவரை நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பன்னாடுகளிடம் தமிழினப்படுகொலைக்கான நீதியைக் கோரியுள்ளார்.

அதேளை இறுதிக்கட்ட போர்க்காலப்பகுதியில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கவேண்டுமெனவும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் வலியுறுத்தியுள்ளார்

நாடாளுமன்றில் நேற்று(06.05.2026) இடம்பெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்குப்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் 

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பேரவையை தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்திலே குறித்த சட்டமூலம் தொடர்பான கருத்துகளுக்குச் செல்ல முன்னர், நீதிக்காக காத்திருக்கும் இனத்தின் குரலாக ஒரு சில கருத்துகளை இப்பேரவையில் முன்வைக்க விரும்புகிறேன்.

இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தீவிலே எங்கள் இனத்தை அழித்த ஓர் ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் உதவியோடு இலங்கை அரசால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

கொத்துக்குண்டுகளிலும் இரசாயனக் குண்டுகளிலும் உலகப்போரியல் அறங்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. எங்கள் தமிழர் தாயகத்தின் நிபுணத்துவங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

எங்கள் முகவரிகள், அடையாளங்கள் அகற்றெடுக்கப்பட்டன. இலட்சக்கணக்கான உறவுகளை போரிலே – முள்ளிவாய்க்காலிலே இழந்தோம்.

எமக்கான நீதி

ஓர் அரசென்று உங்களிடம் நம்பி ஒப்படைத்த எங்கள் உறவுகளை இன்றளவும் தேடி அலைகிறோம்.

எமது உரிமைக்காய் - எமது இயல்பு இருப்புக்காய் - எமது நலவாழ்வுக்காய் போராடியவர்கள் - எங்கள் உறவுகள் இன்றளவும் உங்கள் சிறைகளில் அரசியல் கைதிகளாய் வாடுகிறார்கள்.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு பன்னாடுகளிடம் நீதிகோரிய ரவிகரன் எம்.பி | Ravikaran Mp Justice For Mullivaikkal

எங்களுக்கான நியாயத்துக்காக உங்களிடமும் பன்னாடுகளிடமும் நீதிக்காக 17 ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். ஒரு தீவிலே இவ்வாறு நீதிக்காக – நலவாழ்வுக்காக காத்திருக்கும் எங்களுக்கான நீதியைத் தராது நல்லிணக்கம் எவ்வாறு வரும்.

இலங்கை அரசின் நல்லிணக்க மறுப்பின் மற்றோர் ஆண்டு எதிர்வரும் மே 18 உடன் கடக்கிறது. ஆறாத வடுக்களோடு நீதியை வேண்டியவண்ணம் எங்கள் விடுதலைப் போரிலே உயிரிழந்த எங்கள் மறவர்கள் - பொதுமக்களை இப்பேரவையில் நினைவேந்திக்கொள்கிறோம்.

எமக்கான நீதியை கடந்தகாலங்கள் போல இன்றும் இப்பேரவையின் வாயிலாக பன்னாடுகளிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top