கடந்த ஆண்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதால் நிகர குடியேற்றம், கோவிட் காலத்திற்குப் பிந்தைய மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்தது.
இளம் பிரித்தானியர்
வெளியாகியுள்ள உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டில் பிரித்தானியாவின் மக்கள் தொகையில் 171,000 பேர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்; இது 2024-இல் காணப்பட்ட எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதியாகும்.
கடுமையான விசா விதிமுறைகள் மற்றும் பிரித்தானியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி ஆகியவையே, இந்த குறிப்பிடத்தக்க சரிவுக்குக் காரணமாக அமைந்தன.
ஆனால், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயரும் பிரித்தானியக் குடிமக்களின் எண்ணிக்கைக்கும், பிரித்தானியாவிற்கு குடிபெயரும் நபர்களின் எண்ணிக்கைக்கும் இடையே, குறிப்பாக இளம் பிரித்தானியர்களிடையே, இடைவெளி அதிகரித்து வருவதையும் வெளியாகியுள்ள தரவுகள் வெளிப்படுத்தின.
2025ல் பிரித்தானியாவில் குடியேறியவர்களை விட 136,000 க்கும் அதிகமான பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் பணி விடுமுறை விசாக்களில் உள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்து, சுமார் 38,000-லிருந்து கிட்டத்தட்ட 80,000-ஆக அதிகரித்துள்ளது.
இந்தத் திட்டமானது, இளைஞர்கள் அவுஸ்திரேலியாவில் மூன்று ஆண்டுகள் வரை வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், பயணம் செய்வதற்கும் அனுமதிக்கிறது. போலந்து நாட்டிற்கு, போலந்து பெற்றோரைக் கொண்ட பிரித்தானியாவில் பிறந்த மக்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2015-ல் 42,000-ஆக இருந்து, கடந்த ஆண்டு 185,000-ஆக உயர்ந்துள்ளது. கன்செர்வேட்டிவ் மற்றும் லேபர் ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியிலும் குடிவரவு அமைப்பு கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இடம்பெயர்வு பெருமளவில் குறைந்துள்ளது.
மிகப்பெரிய பிரச்சினை
கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட விதிகள், வெளிநாட்டுக் காப்பகப் பணியாளர்களும் வெளிநாட்டு மாணவர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதைத் தடுத்ததுடன், திறன் விசாக்களுக்கான சம்பள வரம்புகளையும் அதிகரித்தன.
மட்டுமின்றி, லேபர் கட்சி ஆங்கில மொழித் தகுதிகளை உயர்த்தியுள்ளதுடன், படிப்புக்குப் பிந்தைய பட்டதாரி விசாக்களின் கால அளவையும் குறைத்துள்ளது.
வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு ஒன்றில், பிரித்தானிய மக்களில் 41 சதவீதம் பேர் தற்போது குடியேற்றத்தை நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதுகின்றனர் — இது ஒரு மாதத்தில் ஒன்பது புள்ளிகள் அதிகரித்துள்ளது.
விடுதிகளில் தங்கவைக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதை, நேற்று வெளியான உள்விவகார அமைச்சகத்தின் புதிய தரவுகளும் காட்டுகின்றன.
மார்ச் மாத இறுதியில், 20,885 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் வசித்து வந்தனர்; இது ஓராண்டில் 35 சதவீதம் குறைவானதும், 2022-இல் பதிவு தொடங்கப்பட்டதிலிருந்து பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையும் ஆகும்.
