மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் கடுமையான வானிலை நிலைமை நிலவுவதால், மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக காங்கேசன்துறை - மன்னார் - கல்பிட்டி கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன், சிறிய மற்றும் பல நாள் மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையும்,

கல்பிட்டி முதல் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும்,
கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் அலை உயரம் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள், கடற்படை மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அனைவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.