பெங்களூருவில் இருந்து மும்பை நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானம், பறவை மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு பெங்களூரு விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தபோது திடீரென பறவை ஒன்று விமானத்தில் மோதியுள்ளது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு விமானம் உடனடியாக மீண்டும் ஓடுதளத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானத்தின் இயந்திரம் மற்றும் முக்கிய பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த தொழில்நுட்ப நிபுணர்கள் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அனைத்து பாதுகாப்பு ஆய்வுகளும் நிறைவடைந்த பின்னர், விமானம் சுமார் ஒரு மணி நேர தாமதத்துடன் மும்பை நோக்கி புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் தாமதம் காரணமாக பயணிகள் சில சிரமங்களை எதிர்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதால் எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.