இலங்கையில் நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கும் இலங்கையின் அரசியலமைப்பிற்கும் முரணாக உள்ளது என முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்மீமன தயாரத்ன தேரர், 18 வயதிற்கு உட்பட்ட அனைவரும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் சிறுவர்களாக கருதப்படுவதாகவும், மதம் அல்லது இனம் அடிப்படையில் அதில் விதிவிலக்கு இருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரஜைகளும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதால், இந்தச் சட்டம் குறித்து மறுபரிசீலனை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் மீண்டும் சட்டம், மனித உரிமைகள் மற்றும் மதச் சட்டங்கள் தொடர்பான விவாதங்களை முன்னிறுத்தியுள்ளது.