ஈரான் நோக்கிச் சென்ற மற்றுமொரு கப்பலை நடுக்கடலில் முடக்கிய அமெரிக்கா! 


அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை (Naval blockade) மீறி, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை (Kharg Island) நோக்கிச் சென்ற 'எம்/டி லெக்ஸி' (M/T Lexie) என்ற கப்பலின் மீது அமெரிக்க ராணுவம் 'ஹெல்ஃபயர்' (Hellfire) ஏவுகணையை வீசி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது!
போட்ஸ்வானா நாட்டின் கொடியுடன் சென்ற 'எம்/டி லெக்ஸி' கப்பல், அரேபிய வளைகுடாவில் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அமெரிக்க ராணுவம் கடந்த 24 மணி நேரமாகத் தொடர்ந்து பலமுறை எச்சரிக்கைகளை விடுத்தும், அந்தக் கப்பல் மாலுமிகள் அமெரிக்க ராணுவத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் அலட்சியமாகப் பயணத்தைத் தொடர்ந்தனர். 

எச்சரிக்கைக்குக் கப்பல் கீழ்ப்படியாததால், ஒரு அமெரிக்கப் போர் விமானம் அதிநவீன 'ஹெல்ஃபயர்' ஏவுகணையை நேரடியாக அந்தக் கப்பலின் இன்ஜின் அறையைக் குறிவைத்து வீசியது. இதனால் கப்பலின் இயக்கம் முற்றிலுமாக முடக்கப்பட்டதாக அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன. 

இந்தக் கப்பல் ஈரானின் வடக்கு வளைகுடா கடற்கரையிலிருந்து வெறும் 20 மைல் தொலைவில் உள்ள கார்க் தீவைச் சென்றடைய முயன்றுள்ளது. கார்க் தீவு என்பது ஈரானின் மாபெரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமாகும். எனினும், முடக்கப்பட்ட எம்/டி லெக்ஸி கப்பல் கச்சா எண்ணெய்யை ஏற்றிச் சென்றதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் அதிவேகமாக நடந்து வருவதாக அதிபர் ட்ரம்ப் கூறி வந்தாலும், கடற்படை முற்றுகையை அமெரிக்கா மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. ஈரானியத் துறைமுகங்களுக்கு எதிரான இந்தத் தடையாணை அமலுக்கு வந்ததில் இருந்து, அமெரிக்கப் படைகள் இதுவரை 6 வணிகக் கப்பல்களைத் தாக்கி முடக்கியுள்ளன; மேலும் தடையை மீற முயன்றதாக 122 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளன என்று CENTCOM அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது! 

