நாக விகாரைக்குள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் நிறுவுவதற்காக கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

இந்து–பெளத்த அமைப்பின் இணைப்பாளர் கலாநிதி சிதம்பர மேகன், சங்கிலி மன்னன் 407ஆவது சிராத்த தின நிகழ்வில் உரையாற்றியபோது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாண விமான நிலையத்தில் நிறுவுவதற்காக நடராஜர் சிலையை அனுப்பியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலையை விமான நிலையத்தில் நிறுவுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கலாச்சார அமைச்சர் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற காரணத்தால் மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமான நிலையத்தில் வைக்கப்படவிருந்த நடராஜர் சிலை தற்போது நாக விகாரை வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் கவனம் செலுத்தி உரிய தீர்வு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ பதில்கள் இதுவரை வெளியாகவில்லை.