சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா, இந்த அறிக்கையை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேனவிடம் நேற்று (10) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
இந்த அறிக்கை, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிப்பதற்கான முறையான, நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறையை உருவாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூன் 25 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத் தீர்மானத்தின் அடிப்படையில், அரசியலமைப்பின் 34(1) ஆம் பிரிவு, தொடர்புடைய சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சிறைச்சாலை நிர்வாக நடைமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்கும் பொறுப்புடன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கம் மேற்கொண்டு வரும் சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பது, புனர்வாழ்வு நடைமுறைகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச தரத்திற்கேற்ற சிறைச்சாலை அமைப்பை உருவாக்குவது இந்தப் பரிந்துரைகளின் முக்கிய நோக்கங்களாகக் காணப்படுகின்றன.
அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் குறித்து ஆராய்ந்து, பொருத்தமான நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
