22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.அதனைத் தொடர்ந்து, அச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி பல்வேறு தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அதற்கமைய தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 67 ஆகும்.
அம்மனுக்கள் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
செப்டம்பர் 2 ஆம் திகதி அம்மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுசெய்த உயர் நீதிமன்றம், சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்திருந்தது.
இதற்கிடையில், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறும் என பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்தது.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 24 ஆம் திகதி போராட்டமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

