
ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் உள்ளிட்ட ஒலி உபகரணங்களை பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சட்டப்பூர்வமாக பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் வழக்கு இலக்கம் 38/2005 உத்தரவிற்கு அமைய, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261ஆவது பிரிவின் கீழ் பொதுத் தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒலிபெருக்கி பயன்படுத்தும் நேர வரையறைகள்
திங்கட்கிழமை – வியாழக்கிழமை: இரவு 10.00 மணி வரை
வெள்ளி – சனிக்கிழமை: அதிகாலை 1.00 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை: அதிகாலை 12.30 மணி வரை

இந்த நேர வரையறைகள் அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கு தானாகக் கிடைக்கும் உரிமை அல்ல. அனுமதி பெற்றிருந்தாலும், ஒலியானது சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அனுமதி வழங்கப்பட்ட நிகழ்வுகளில் நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொதுமக்கள் முறைப்பாடு செய்து ஒலி மூலம் இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், அதிக ஒலியுடன் செயற்படுவதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்படும்.

பொலிஸாரின் அறிவிப்பையும் மீறி தொடர்ந்தும் அதிக சத்தம் எழுப்பப்பட்டால், ஒலி உபகரணங்களை பொலிஸார் பொறுப்பேற்பது உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முறைப்பாடுகளுக்கு:
118 / 119 அவசர தொலைபேசி இலக்கங்கள் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்புகொள்ளலாம்.