சுரேஷ் சலே குறித்து இலங்கை அரசிடம் ஐ.நா எழுத்துமூல விசாரணை!

Author
0

  அரசப் புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நான்கு சிறப்புப் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எழுத்துமூல விசாரணையொன்றை அனுப்பியுள்ளனர்.

பயங்கரவாதத்தை எதிர்க்கும்போது மனித உரிமைகளைப் பாதுகாத்தல், தன்னிச்சையான தடுப்புக் காவல்களைத் தடுத்தல், சுகாதாரத்திற்கான உரிமை மற்றும் நீதித்துறை சுதந்திரம் ஆகிய துறைகளுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் இந்த கூட்டுப் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த ஆவணத்தின் மூலம் எந்தவொரு இறுதி முடிவிற்கும் வரவில்லை எனத் தெரிவித்துள்ள சிறப்புப் பிரதிநிதிகள், தமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளின் துல்லியத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக 8 விடயங்களின் கீழ் அரசாங்கத்தின் அவதானிப்புகளைக் கோரியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளமையின் சட்டப்பூர்வ அடிப்படை, அவருக்கு எதிரான விசாரணைகளின் தற்போதைய நிலை மற்றும் தடுப்புக் காவலில் உள்ளபோது சட்டத்தரணிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து அரசாங்கத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் சுரேஷ் சலேவின் தற்போதைய சுகாதார நிலைமை மற்றும் அவருக்குத் தேவையான நிபுணத்துவ மருத்துவ வசதிகளை வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ.நா பிரதிநிதிகள் வினவியுள்ளனர்.


சட்ட மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ள விதம், இதய நோய் மற்றும் மனநல நிலைமைகள் தொடர்பான நிபுணத்துவ சிகிச்சைகள், தடுப்புக் காவல் சூழல் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதாக உள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தடுப்பிலுள்ள ஒருவரின் வாழ்வுரிமை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடைபெறுகிறதா என்பது குறித்தும் வினவப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை மற்றும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை உள்ளிட்ட சர்வதேச சாசனங்களுக்கு அமைவாகச் செயற்படுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கடிதம் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பாக முன்னரும் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச சமூகம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளதாகவும், சட்டப் பாதுகாப்பும் நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் நடைமுறைகளின்படி, இந்தத் தொடர்பாடல் மற்றும் அதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் உத்தியோகபூர்வ பதில் ஆகியவை 60 நாட்களின் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உத்தியோகபூர்வ பதிவு முறைமையின் ஊடாகப் பகிரங்கப்படுத்தப்படவுள்ளன. 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு பிரதிநிதிகளான பென் சாவுல், கானா யட்கிஸ்வா, டெலாங் மோகொபிங் மற்றும் மார்கிரட் சத்தர்வடை் ஆகியோர் இந்த கடிதத்தை, இலங்கை அரசாங்கத்தைிற்கு அனுப்வி வைத்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top