நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
இன்று (20) காலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையை எட்டியுள்ளது.
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், தேவையற்ற முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

.jpg)