ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளில் ஜேசன் சஞ்சய் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில், அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தனது தந்தை விஜய் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் தெரிவித்த கருத்துகள் அதிக கவனம் பெற்றுள்ளன.
குறிப்பாக, தனக்குப் பிடித்த திரைப்படம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், ‘The Pursuit of Happyness’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் தொடர்ந்து போராடுவது, சரியான விடயங்களைச் செய்ய முயற்சிப்பது, மற்றவர்களை ஊக்குவிப்பது மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது உள்ளிட்ட பல விடயங்களை அந்தத் திரைப்படத்திலிருந்து தான் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான கடினமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், நல்ல குணங்களுடன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் தந்தை கதாபாத்திரம் தனது மகனுக்குக் கற்றுக்கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தனது தந்தை விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், விஜய் தற்போது முக்கியமான பொறுப்பில் இருப்பதால், தன்னையும் தனது தந்தையையும் தொடர்புபடுத்தி அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, தனது குடும்பத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளதாகவும், யாரையும் புண்படுத்தும் வகையில் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் காரணமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருவதாக ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.

.jpg)