கோட்டா கோ கம (Gota Go Gama) போராட்ட களத்தில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வைக்கோரி, சட்டமா அதிபர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 20 பிரதிவாதிகள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, 328 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டா கோ கம" போராட்ட களத்தில் நடந்ததாக கூறப்படும் தாக்குதலின் போது 56 நபர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படுத்தியதற்காகவும் குற்றப்பத்திரிகைகள் வழங்கப்படும் என்றும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது
2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது அரசுக்கும் எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் மாபெரும் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.
கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக கோட்டா கோ கம மற்றும் கோ கம என்ற பெயர்களில் ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்து அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் காரணமாக பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் பதிவானதுடன் , அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதனையடுத்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச, 2022 ஜூலை 14 அன்று தனது பதவிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிய நிலையில் அவரது ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்தது.


