அரசின் அலட்சியப் போக்கு காரணமாக தேசிய மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் ஒருமுறை செயலிழந்தமையால், நாட்டின் பொருளாதாரத்துக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (22.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலப்பிட்டிய இணை அமைப்பாளர் சங்க அபயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக நாட்டுக்கு 8.4 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்ட நிலையில், அது குறித்து இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், முறிவுகளைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், கடந்த சனிக்கிழமையும் மீண்டும் மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்துள்ளது.
தேசிய முறைமை மேலாளரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. டீசல் மாபியாவைத் தொடர்வதற்காகவே மின்சாரக் கட்டமைப்பு முறிவடைய அனுமதிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதைய அரசு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் நாட்டுக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது அதிக செலவில் டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. தினசரி டீசல் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு 30 வீதம் முதல் 35 வீதம் வரை அதிகரித்துள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் 187 மெகாவாட் திறனில் இயங்கிய முதலாவது டர்பைன் செயலிழந்ததே இந்த முறிவுக்கு உண்மையான காரணம் எனத் தெரியவந்துள்ளது.
குறைந்த விலையில் சூரிய மின்சாரத்தைப் பெற முடியும் என்ற போதிலும், அதிக விலையில் டீசல் மின்சாரத்தைப் பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 200 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளது. மின்சாரக் கட்டணத்தை 1/3 பங்கினால் குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி அரசு கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படும் எல்நினோ வறண்ட காலநிலையைப் பயன்படுத்தி அவசர மின் கொள்முதல் மூலம் முறைகேடுகளில் ஈடுபட அரசு தயாராகி வருகின்றது. எனவே, நாட்டின் மின்சாரக் கட்டமைப்பைப் பலிகொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். சூரிய மின்சக்தி திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றார்.


