மட்டக்களப்பு பகுதியில் 16 வயது சிறுமியைத் தவறான நடத்தைக்கு உட்படுத்திய 52 வயது நபர் ஒருவருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20 ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று (30.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த 16 வயது சிறுமி ஒருவரைத் தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 52 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய, சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியைக் கவர்ந்து சென்ற குற்றத்திற்காகத் தண்டனைச் சட்டக்கோவை 354ஆம் பிரிவின் கீழ் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது குற்றமான தவறான நடத்தைக்கு உட்படுத்தல் தொடர்பான துன்புறுத்தல் குற்றச்சாட்டிலிருந்து தண்டனைச் சட்டக்கோவை 345ஆம் பிரிவின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்
மூன்றாவது குற்றமான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டின் கீழ், தண்டனைச் சட்டக்கோவை 364ஆம் பிரிவின்படி 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்டஈடாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும், அதனைச் செலுத்தத் தவறினால் இரண்டு வருடங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு குற்றங்களுக்காகவும் விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், இதற்கமைய மொத்தம் 21 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


