தீர்க்கப்படாத மனிதாபிமானப் பிரச்சினைகளைக் கையாள்வதில் பக்கச்சார்பற்ற, மனிதாபிமானமான, சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது முக்கியமானதாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் தலைவர் ஏஞ்சலிக் அப்பெய்ரூக்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (04.10.2026) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மோதல்கள் முடிவுக்கு வந்த மாத்திரத்தில் அதன் மனிதாபிமானத் தாக்கங்கள் முடிவடைவதில்லை என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அன்புக்குரியவர்கள் குறித்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு இனம், மதம் அல்லது அரசியல் பின்னணி பாராமல் மரியாதை, கருணை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
அத்தகைய தேவைகளுக்குத் தொழில்முறையாகவும் பக்கச்சார்பின்றியும் பதிலளிக்கக் கூடிய நம்பகமான இலங்கை நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் கடந்த கால மோதல்கள் காரணமாகத் தொடரும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான தேசியத் திறன்களை வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள், காணாமல்போன தமது அன்புக்குரியவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை குறித்தும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அண்மையில் வலியுறுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
காணாமல்போனோரைக் கண்டறிவதற்காகச் சட்ட மருத்துவத் துறையின் திறன்களை வலுப்படுத்துவது, அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
எனினும், நீண்ட காலத் தீர்வுகளுக்கு நாட்டின் தேசிய நிறுவனங்களின் பயனுள்ள செயற்பாடுகளும் திறன்களுமே வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எஞ்சியுள்ள மனிதாபிமான சவால்களுக்குத் தீர்வுகளைக் காணவும், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கான மதிப்பை வலுப்படுத்தவும் நாடாளுமன்றம் மற்றும் தேசிய நிறுவனங்கள் ஆக்கபூர்வமாகப் பங்களிக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

.jpg)