நாடு முழுவதும் தொடர்ச்சியான பலத்த மழை காரணமாக பல பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால், அவற்றுள் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தெதுரு ஓயா, ராஜங்கனை, குக்குளே கங்கை மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், குறித்த நீர்த்தேக்கங்களுக்குக் கீழே அமைந்துள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக கலாவாவியின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக தம்புள்ள ஓயா ஊடாக கலாவெவுக்கு வினாடிக்கு 5,500 கன அடிக்கு நெருக்கமான நீர் வந்து சேருவதுடன், தற்போது அதன் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.
எனவே நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நீர் நிலைகளில் ஏற்படும் நீர்மட்ட மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வான் கதவுகள் திறப்பு மற்றும் நீர் வெளியேற்றம் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றிச் செயற்படுமாறு பொதுமக்களுக்கு மேலதிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை பெய்த மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வெள்ளப்பெருக்கு அளவை எட்டவில்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் இயல்பான அளவில் அதிகரித்திருந்தாலும், அவை இன்னும் வெள்ளப்பெருக்கு அளவை எட்டவில்லை என்று நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
மழை காரணமாக களு கங்கையில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், அது பெரிய வெள்ளப்பெருக்கு அளவை எட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், களனி கங்கையிலும் நீர்மட்டம் இயல்பான அளவில் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு கூடுதலாக, அனுராதபுரம், திருகோணமலை, புத்தளம் மற்றும் குருநாகலை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாகவும், அதற்கேற்ப தெதுரு ஓயா மற்றும் ராஜங்கனை நீர்த்தேக்கங்களின் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் பெய்த மழையின் அடிப்படையில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களை நீர்ப்பாசன திணைக்களம் கண்காணித்து வருவதாகவும், அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆறுகளின் நீர்மட்டத்தைக் கருத்தில் கொண்டால், களு ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தாலும், அது ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு நிலையை எட்டாது. இதேபோல், மேல் களனி ஆற்றுப் பகுதியில், பல இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் மழை பெய்திருந்தாலும், நீர்மட்டம் இயல்பான உயர்வையே காட்டுகிறது. ஆனால் வெள்ளப்பெருக்கு நிலையை எட்டவில்லை. நீல்வலா, கிங்கங்கா, அத்தநாகலு ஓயா, மகா ஓயா போன்ற மற்ற ஆற்றுப்படுகைகளில், இயல்பான உயர்வு இருந்தபோதிலும், இன்னும் வெள்ளப்பெருக்கு நிலையை எட்டவில்லை.
குறிப்பாக யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலும், மன்னாரிலும் திடீர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றுப் படுகைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


