அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் உத்தேச சட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தேச சட்டத்தின் காரணமாக சர்வதேச வரிச் சலுகைகள் கிடைக்காமல் போகக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஆடை உற்பத்தியாளர்கள் கூட்டுச் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கைக்கென பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவையில்லை என்பதை எந்தக் சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.
மாறாக, நீதிமன்ற மேற்பார்வை அற்ற இத்தகைய விரிவான மற்றும் அடக்குமுறைச் சட்டம் மூலம், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமான சர்வதேச வர்த்தக வாய்ப்புகள் கடுமையான ஆபத்துக்குள்ளாகியுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய ஜி.எஸ்.பிளஸ் சலுகைக் காலம் 2027 ஆம் ஆண்டுடன் முடிவடைவதால், ஏனைய அனைத்துப் பயனாள நாடுகளைப் போலவே இலங்கையும் இந்தச் சலுகையின் அடுத்த புதிய வர்த்தக சுழற்சிக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வடிவத்தில் இந்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், புதிய சுழற்சிக்காக நாடு சமர்ப்பிக்கும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு அதுவே மிக முக்கிய தடையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் என்பது கடுமையான விதிகளின் அடிப்படையில் செயற்படும் ஒரு அதிகாரத்துவ நிறுவனமாகும். இச்சட்டம் காரணமாக இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், நாட்டிற்குரிய மிகப்பெரிய வர்த்தக வரிச் சலுகைத் திட்டம் முழுமையாக இல்லாமல் போய்விடும். எனவே, சட்டமூலத்தை இயன்றவரை விரைவாகத் திருத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும் என எமது ஆடைச் சங்கம் வலியுறுத்துகிறது. அது நிறைவேற்றப்பட்டதன் பின்னர் திருத்தங்களைச் செய்ய முற்படுவது பாரியளவு நட்டத்தை ஏற்படுத்தும் என அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

