மகிந்த ஆட்சியில் நடந்த பாரிய மோசடி - அநுர அரசினால் அம்பலப்படுத்தப் போகும் உண்மைகள்

Author
0

கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஷாங்கிரி லா மற்றும் One Galle Face கட்டடங்களைக் கொண்ட காணிகளை விற்பனை செய்ததில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் இலஞ்ச, ஊழல், வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார அவர்களின் கையொப்பத்துடன் நேற்று ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதம் மூலமாகவே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், அரசு நிலக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 454) 23(2) பிரிவின் கீழ், அப்போதைய ஜனாதிபதியின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்கவினால் ஷாங்கிரி லாவுக்கு காணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அன்று, வரைபட இலக்கம் 9132 இல் உள்ள தொகுதி இலக்கம் 01 ஐச் சேர்ந்த 2.4361 ஹெக்டேர் நிலப்பரப்பு ஷாங்கிரி லா கோல்பேஸ் லங்கா லிமிடெட்' நிறுவனத்திற்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதே வரைபடத்தின் தொகுதி இலக்கம் 2 ஐச் சேர்ந்த மேலும் 1.6108 ஹெக்டேர் நிலப்பரப்பு 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி அன்று அதே நிறுவனத்திற்கு 5,499 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுமார் 10 ஏக்கர் 11 பேர்ச்சஸ் கொண்ட மொத்த நிலப்பரப்பு, 13,749 மில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த காணிப் பரிவர்த்தனையின் போது அரசு நிலக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, முதலாவது காணிப் பரிவர்த்தனை தொடர்பான வரைபடம் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி அன்று தயாரிக்கப்பட்டு, டிசம்பர் 28ஆம் திகதி அன்று உறுதிப்பத்திரம் எழுதப்பட்டுள்ளது.

டிசம்பர் 29ஆம் திகதியன்று அது பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடும் முறைப்பாட்டாளர்கள், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூன்று நாட்கள் போன்ற மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்திருப்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


மேலும், குறித்த காணிகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என ஆராய வேண்டும். காணியின் மதிப்பீட்டு முறைமை மற்றும் விற்பனையின் போது பகிரங்க ஏலம் அல்லது திறந்த விண்ணப்பங்கள் கோரப்படாமை தொடர்பிலும் விசாரணை அவசியம் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு காணிகளை விற்பனை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் இந்தப் பரிவர்த்தனையில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து சந்தேகம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குறித்த பரிவர்த்தனை ஊழல் நிறைந்தது என உறுதிசெய்யப்பட்டால், அதற்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் விற்பனை செய்யப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசுக்கு கையகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைப்பு தனது முறைப்பாட்டின் மூலம் கோரியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top