ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்குச் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றளிப்பு

Author
0

 சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலத்துக்கான சான்றிதழை நேற்று வழங்கினார்.

இந்தச் சட்டமூலம், பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமானவரால் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இந்த மாதம் 8ஆம் திகதி நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அடையாளம் காணப்பட்ட சட்ட ரீதியான, விளக்கமளித்தல் சார்ந்த, நிர்வாக ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைச் சீர்செய்தல், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரலின்போது எதிர்கொள்ளப்படும் சவால்களுக்குத் தீர்வு காணுதல் ஆகியவையும் இதன் நோக்கங்களாகும்.

அத்துடன், இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நிர்வாகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை மையப்படுத்தப்பட்ட மின்னணு முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கும் இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கும்.

இந்தத் திருத்தங்கள், இலங்கையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், ஊழல் தடுப்புச் சட்டத்தை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்துவதற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமாக சட்டமாக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top