முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

Author
0

 முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் இன்மையால், மக்கள் 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று சேவைகளைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்குத் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் விரைவாக நிறுவப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 2027ஆம்ஆண்டு ஜனவரி மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

நாடாளுமன்ற குழு அறையில் நேற்று (21.10.2026) இடம்பெற்ற வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் தம்மால் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் நேற்று நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தேன். குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டுமென ஏற்கனவே கடந்த 02.01.2026 அன்று வீடமைப்பு, உட்கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து குறித்த இருமாவட்டங்களுக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவது தொடர்பில் வீடமைப்பு, உட்கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரிடமிருந்து வாய்மூல பதிலை பெறுவதற்காக கடந்த 04.02.2026 அன்று என்னால் வாய்மூல விடைக்கான வினாக்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த 19.08.2026 அன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதும், கடந்த 11.09.2026அன்று பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் சார்ந்த சேவைகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவர வேண்டுமெனக் கோரி நாடாளுமன்றில் முன்மொழியப்பட்ட பிரேரணையில் பங்கேற்று உரையாற்றும்போதும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் நிறுவப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவதன் முன்னேற்ற நிலை தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அத்தோடு இலங்கையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் அமைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான முகாமையாளர் அலுவலகம் இன்றிய நிலையில், நீர் வழங்கல் தொடர்பான முறைப்பாடுகளுக்கான தீர்வு காணல், மாதாந்த கட்டணப் பட்டியலை சீராக்கல், நீர் பரிசோதனை, ஆய்வுகூட வசதிகள், உத்தியோகபூர்வ நிதி நடவடிக்கைகளுக்கான காசாளர் வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காகவும் மக்கள் 100 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்லவேண்டிய நிலை காணப்படுவதையும் எடுத்துக் கூறியிருந்தேன்.


எனவே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் விரைவாக நிறுவப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன். இந்நிலையில் ஏற்கனவே எம்மால் கடிதம்மூலம் வலியுறுத்தப்பட்டதற்கு அமைவாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுவருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் இதன்போது பதிலளித்தனர்.

குறிப்பாக எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முல்லைத்தீவிற்கும், கிளிநொச்சிக்கும் தனியான பிராந்திய நீர்வழங்கல் முகாமையாளர் அலுவலகங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது என்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top