மக்களின் உரிமைகளைபறிப்பதற்கு அரசு முயற்சி : மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

Author
0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசு முயற்சிப்பதானது, பொலிஸாருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசு, அதற்குப் பதிலாக மாற்றுச் சட்டமாக எதிர்ப்புகளை அடக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன இதனைத் தெரிவித்தார்.

ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான பொய் வாக்குறுதி, நிலக்கரி கொள்வனவு விவகாரம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் ஏற்கனவே கடுமையான அதிருப்தியடைந்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் அரசு முன்னெடுக்க முனையும் இந்தச் சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசுவது அவசியமாகின்றது. ஜனநாயக ரீதியில் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்த இலங்கை மக்களின் சட்ட ரீதியான உரிமைகளும் ஜனநாயக நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு வருகின்றன.

சித்திரவதைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும், பொலிஸாரின் அதிகாரங்களை நீதித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கும் இவ்வாறான புதிய சட்டங்கள் தடையாக அமையும் அபாயம் காணப்படுகின்றது" என தெரிவித்தார்.  


அரசின் போக்கு குறித்து மேலும் சாடிய அவர், "ஐக்கிய தேசியக் கட்சியினர் நீண்டகாலமாகச் சட்டங்களை இயற்றி அடக்குமுறையை முன்னெடுத்த வரலாறுகள் உள்ளன. ஆனால், தற்போது புதிய போர்வையில் வந்துள்ள இந்த அரசும் அதேபோன்று தவறான வழியிலேயே செல்ல முற்படுகின்றது.

விசாரணை நிறுவனங்கள் ஏற்கனவே அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய சட்டமூலங்கள் அறிமுகப்படுத்தப்படுவது குறித்துப் பொதுமக்கள் தீவிர விழிப்புடன் இருக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.  


அவர் மேலும் கூறுகையில்,

"பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்த அரசு, அதற்குப் பதிலாக அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும்.

நிலக்கரி விவகாரம் மற்றும் மின்சாரக் கட்டணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறும் அரசு, இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் அப்பாவி மக்களின் குரலை ஒடுக்க முனைகின்றது. எனவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தை மீண்டும் பரிசீலித்து, எதிர்ப்புகளை ஒடுக்கும் பிரிவுகளை நீக்க வேண்டும்"  என்று வலியுறுத்தினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top