யசிரு புதா படகில் ரூ. 1.5 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள்

Author
0

 நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் ஊடாக சுற்றிவளைக்கப்பட்ட மீன்பிடிப் படகில், ஒன்றரை பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (13) குறித்த படகு காலி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், அதனை நேரில் பார்வையிட்ட போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.


நாட்டின் தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளைக் கடத்திச் சென்ற 'யசிரு புதா' என்ற மீன்பிடிப் படகு கடந்த 11 ஆம் திகதி சுற்றிவளைக்கப்பட்டது.


 

இதன்போது, குறித்த படகிலிருந்த 5 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் அப்படகும் மீனவர்களும் இன்று காலை காலி மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.

 

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அதனுள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் இருந்தமை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.

 

இதற்கமைய, படகினுள் சுமார் 60 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 50 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் இருந்தமை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எவ்வாறாயினும், குறித்த போதைப்பொருள் தொகை தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், இந்தப் போதைப்பொருட்களின் மொத்த எடை 110 கிலோகிராமுக்கும் அதிகம் எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர,

"மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் குழுவொன்றையே கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த படகுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் ஊடாக 60 கிலோ கிராமுக்கு அண்மித்த ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகப் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோன்று ஐஸ் போதைப்பொருளும் 50 கிலோகிராமுக்கும் அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக 110 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் காணப்படுகின்றன. இதன் பெறுமதியை எடுத்துக்கொண்டால், ஒன்றரை பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் எனத் தற்போது மதிப்பிட முடியும். எனினும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய இது மாறுபடக்கூடும்," எனக் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top