சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), 2027 ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம் முதல் 2035 ஆம் ஆண்டு வரையிலான பல்வேறு முக்கிய தொடர்களுக்கான தகுதிப் பாதைகளை வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகளின் ஒரு பகுதியாக, ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நுழைவதைக் குறிக்கும் லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 (LA28) போட்டிகளுக்கான தகுதிப் போட்டிகளும் இதில் அடங்கும்.
முதல் செம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான மைதானம் இந்தியாவாகும், இரண்டாவது தொடருக்கான மைதானம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முழு மற்றும் இணை உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையிலும், தகுதிப் பாதைகளை வலுப்படுத்தும் வகையிலும், சர்வதேச கிரிக்கெட் முழுவதும் போட்டித் தரங்களை மேம்படுத்தும் வகையிலும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களுக்கான ஐ.சி.சி முக்கிய தொடர்களின் கால அட்டவணை மற்றும் நடத்தும் நாடுளின் விபரங்கள்
2028 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் டி20 உலகக் கிண்ணமானது ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 12 வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2029 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது ஜூன் 8 முதல் 12 வரை இங்கிலாந்திலும், ஆண்கள் செம்பியன்ஸ் கிண்ணமானது ஒக்டோபர் 9 முதல் 28 வரை இந்தியாவிலும் நடத்தப்படவுள்ளன.
2030 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் டி20 உலகக் கிண்ணம் ஜூலை 4 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.
2031 ஆம் ஆண்டில் உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 12 முதல் 16 வரை இங்கிலாந்திலும், ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம் ஒக்டோபர் 9 முதல் நவம்பர் 23 வரை இந்தியா மற்றும் பங்களாதேஷிலும் நடைபெறவுள்ளன.
2032 முதல் 2035 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 2032 ஆண்டு ஆண்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 14 வரையிலும்,
2033 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 9 முதல் 13 வரையிலும், 2033 ஆண்கள் செம்பியன்ஸ் கிண்ணம் ஒக்டோபர் 2 முதல் 23 வரையிலும், 2034 ஆண்கள் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் ஜூலை 6 முதல் ஓகஸ்ட் 6 வரையிலும், 2035 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11 வரையிலும், 2035 ஆண்டு ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம் ஒக்டோபர் 2 முதல் நவம்பர் 18 வரையிலும் நடத்தப்படவுள்ளன.
எனினும் இவற்றை நடத்தவுள்ள அணிகள் பற்றிய விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தகுதிப் போட்டிகளுக்கான வடிவங்கள்
லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் 2028 (LA28) தகுதிச் சுற்று
லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கான தகுதிச் சுற்று 2028 பெப்ரவரி 5 முதல் 13 ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறும். அதைத் தொடர்ந்து பெப்ரவரி-மார்ச் மாதங்களில் அமெரிக்காவில் பெண்களுக்கான தகுதிச் சுற்று நடைபெறும்.
2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று
இந்த தகுதிச்சுற்றுப் போட்டியானது 2027 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 23 போட்டிகளைக் கொண்டிருக்கும். ஐந்து அணிகள் கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட இந்த 10 அணிகள் பங்கேற்கும் தொடரில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறும்.
முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிரதான தொடருக்குத் தகுதி பெறும். வெற்றியாளர் நேரடியாக குழு நிலைக்கு முன்னேறும் நன்மையைப் பெறுவார், அதே நேரத்தில் மற்ற மூன்று அணிகள் இறுதி குழு நிலை இடத்திற்காக 'சுப்பர் சீரிஸ்' போட்டிகளில் மோதும்.
2028 ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று: 16 அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிச்சுற்றுக்கான திகதிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது 2028 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும். எட்டு அணிகள் நேரடியாக பிரதான தொடருக்குத் தகுதி பெறும். குறைந்தபட்ச செயல்திறன் அளவுகோல்களின்படி ஒவ்வொரு பிராந்தியத்தின் சிறந்த அணியும் தகுதி பெறும். மீதமுள்ள இடங்கள் ஒட்டுமொத்தமாக அதிக இடங்களைப் பிடித்த அணிகளுக்குச் செல்லும்.
2028 பெண்கள் டி20 உலகக் கிண்ணத் தகுதிச்சுற்று: இந்தத் தகுதிச்சுற்றுக்கான பிராந்திய ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 2026 பதிப்பில் இடம்பெற்று 2028ஆம் ஆண்டுக்கு தானாகத் தகுதி பெறாத நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள், ஆபிரிக்கா, ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய-பசிபிக் (தலா இரண்டு) மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (தலா ஒன்று) ஆகிய பிராந்தியங்களில் இருந்து தகுதி பெற்ற எட்டு அணிகளுடன் இணைந்து தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடும்.
முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2028 ஆம் ஆண்டில் இடம்பெறும் பிரதான தொடருக்கான இடங்களை உறுதி செய்யும்.

.jpg)