அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஊர் ஊராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட பொய் வாக்குறுதிகளை வெளிப்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கமின் கமட்ட என்ற பிரசாரக் கூட்டத் தொடர் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
கட்சியின் செயல்பாட்டுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த விபரங்களைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் , இந்த பிரசாரக் கூட்டங்கள் வாரத்தில் 5 நாட்களும் நாடு முழுவதிலும் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் மக்களுக்கு வழங்கிய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் மீண்டும் மீண்டும் நினைவூட்டுமாறு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
323 கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்ட விவகாரம், நிலக்கரி கொள்முதல் மோசடி, மத்திய வங்கி கணினி அமைப்பினுள் ஊடுருவல், தவறான வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டமை போன்ற கடுமையான நிதி முறைகேடுகள் குறித்து மக்களுக்கு மொட்டு கட்சி தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
தேர்தலின் போது வாக்குறுதியளித்தவாறு சுகாதாரம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வரிகளை முழுமையாக நீக்கத் தவறியமை மற்றும் ஏனைய பொய் வாக்குறுதிகள் தொடர்பிலும் இதன்போது மக்களிடம் அம்பலப்படுத்தப்படும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

.jpg)