சிவாஜிலிங்கம் அவர்கள் இறுதிவரை தனது தமிழ்த் தேசியக் கொள்கையோடும், தமிழ்த் தேசிய அரசியல் பாதையோடும் உறுதியாகப் பயணித்தவர். எந்தச் சூழ்நிலையிலும் தனது கொள்கையிலிருந்து விலகவில்லை. எதற்காகவும் தனது அரசியல் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கவும் இல்லை.
இறுதிவரை இனத்திற்காகப் போராடியவர்களின் நினைவுகளைச் சுமந்தவர். அந்த வரலாற்றையும், போராட்ட நினைவுகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் முக்கிய பங்காற்றியவர்.
அவருக்கு அரசியலில் நடிக்கத் தெரியாது!
ஒருவேளை அவர் அரசியல் நாடகங்களை நடிக்கத் தெரிந்திருந்தால், இன்று அவரும் ஒரு பெரும் அரசியல் தலைவராக வலம் வந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. கொள்கைக்காக வாழ்ந்தார். தான் நம்பிய அரசியல் பாதையில் இறுதிவரை பயணித்தார்.
அதனால்தான் இன்று அவரை இந்த அளவுக்குப் போற்ற வேண்டியிருக்கிறது.
தமிழ் மக்கள் வரலாற்றுத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதில் வல்லவர்கள்!தங்களுக்கான நியாயமான போராளிகளையும், கொள்கை உறுதியுள்ள அரசியல் தலைவர்களையும் ஒதுக்கிவிட்டு, அந்தந்த நேரச் சலுகைகளுக்காகவும், அரசியல் அலைகளுக்காகவும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அணிவகுத்து வாக்களித்துப் பழகிவிட்டோம்.
அந்த அரசியல் போக்கினால் வீழ்த்தப்பட்டவர்களில் ஒருவர்தான் சிவாஜிலிங்கம்.
என்ன செய்வது?
இதுதான் இன்றைய தமிழ் அரசியலின் கசப்பான யதார்த்தம்!
நாம் தன்மானத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் தன்மானத்தையும் கொள்கையையும் விற்பவர்களைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். உண்மைக்காகவும் கொள்கைக்காகவும் நிற்பவர்களைப் புறக்கணிக்கிறோம்.
சிவாஜிலிங்கம் ஒரு தனிமனிதர் மட்டுமல்ல; ஒரு அரசியல் வரலாற்றின் அடையாளம்!
அவர் அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் காலத்தால் ஒருபோதும் மறக்கப்படக் கூடாதவர்.
நாளை நமது போராட்ட வரலாறுகளும், தியாகங்களும் மறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.இன்று அந்த வரலாற்றைச் சுமந்திருந்த இன்னுமொரு தூணும் சரிந்து விட்டது!
சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது வீரவணக்கம்!
அவர் சுமந்த கொள்கைகளும், நினைவுகளும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டும்.
மறக்கக் கூடாது! மறக்க விடவும் கூடாது!

