காசாவில் விரைவில் பஞ்சம் ஐ.நா. அமைப்புகள் எச்சரிக்கை..!!

tubetamil
0

 காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அந்த முற்றுகை நிலத்தின் வடக்கில் விரைவில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

கடந்த ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் வடக்கு காசாவுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருப்பதோடு பிரதான ஐ.நா. அமைப்பினால் அதனை கையாள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உதவிகளை நாடி நிற்கும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களுக்கு உதவும்படி மற்ற அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

‘எந்த மாற்றமும் நிகழாத பட்சத்தில், வடக்கு காசாவில் விரைவில் பஞ்சம் ஏற்படும்’ என்று உலக உணவுத் திட்ட பிரதி நிறைவேற்று பணிப்பாளர் கார்ல் சகாவு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.

பரந்த அளவில் பட்டினி நிலவும் சூழலில் கிட்டத்தட்ட பஞ்சம் ஏற்படும் சூழல் இருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகத்தின் தலைவரான ரமேஷ் ராஜசிங்கம் எச்சரித்தார்.

வடக்கு காசாவுக்கு உதவிகள் செல்வது இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பதோடு காசாவின் மற்றப் பகுதிகளுக்கு மாத்திரம் சிறிய அளவான உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. போர் தந்திரமாக பொதுமக்களின் பட்டினியை பயன்படுத்துவதை தடுக்கும்படி பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடுகளுக்கு ஐ.நா உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிபித்ஸ் கடந்த வாரம் எழுதி இருந்தார்.

‘பெப்ரவரி இறுதியில், காசா மக்கள் தொகையில் கால் பங்கினரான குறைந்தது 576,000 பேர் பஞ்சத்தில் இருந்து ஒரு அடி தூரத்தில் உள்ளனர். வடக்கு காசாவில் உள்ள இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆறில் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று ராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் உள்ள சுமார் 97 வீதமான நிலத்தடி நீர் மனித பயன்பாட்டுக்கு தகுதியற்றதாக இருப்பதாகவும் அங்கு விவசாய உற்பத்தி வீழ்ச்சி அடைய ஆரம்பித்திருப்பதாகவும் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மோரிசியோ மார்டீனா எச்சரித்துள்ளார்.

எனினும் உதவிகள் தயார் நிலையில் எல்லையில் காத்திருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸின் சார்பில் பேசவல்ல ஸ்டீபன் டுஜரிக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

‘காசாவுடனான எல்லையில் உணவு விநியோகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் காசாவெங்கும் உள்ள 2.2 மில்லியன் மக்களுக்கும் தங்களால் உணவளிக்க முடியும் என்றும் உலக உணவுத் திட்ட சகாக்களும் எம்மிடம் குறிப்பிட்டார்கள்’ என்று அவர் கூறினார்.

காசாவுக்கு செல்வதற்கு தயாராக சுமார் 15,000 மெட்ரிக் தொன் உணவுகளைச் சுமந்த சுமார் 1,000 லொறிகள் எகிப்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதவிகள் முடக்கம்

எனினும் காசாவுக்கு உதவிகள் செல்வதை இஸ்ரேலிய படை திட்டமிட்ட வகையில் முடக்கி வருவதாக ஐ.நா மனிதாபிமான அலுவலக பேச்சாளர் ஜேன்ஸ் லேர்க் ஜெனீவாவில் இருந்து நேற்று முன்தினம் குறிப்பிட்டார்.

உதவி வாகனங்கள் வடக்கு காசாவுக்கு செல்ல அனைத்தும் திட்டமிடப்பட்டபோதும் இஸ்ரேலிய நிர்வாகம் அண்மைய வாரங்களாக அனுமதி மறுத்து வருகிறது.

கடைசியாக கடந்த ஜனவரி 23 ஆம் திகதியே அந்தப் பகுதிக்கு உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள மக்கள் போர் சூழலுக்கு மத்தியிலும் உதவிக்காக வீதிகளில் காத்திருப்பதோடு சிறுவர்கள் வீதியில் இருக்கும் குப்பைகளிலும் உணவு தேடி வருகின்றனர்.

‘குளிரில் போருக்கு மத்தியில் நாம் அமர்ந்திருக்கிறோம்’ என்று பலஸ்தீன ஆடவர் ஒருவர் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டார். ‘நாம் ஒருபோதும் இப்படி இருந்ததில்லை. உதவிக்காகவும் எமது குழந்தைகள் உண்பதற்காகவும் எமது வெறும் வயிற்றை நிரப்புவதற்காகவும் ஏதேனும் கிடைக்குமா என்று காத்திருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு காசாவில் உணவு கிடைப்பது பெரும் போராட்டமாக மாறியிருக்கும் சூழலில் சிலர் விலங்குணவுகளை உண்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் எதிர்வரும் நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கக்கூடும் என்று காசா சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

எனினும் காசா நகருக்கு அருகில் உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய பீரங்கி தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமாக வபா குறிப்பிட்டது.

இஸ்ரேலால் பலஸ்தீன மக்கள் வேண்டுமென்று பட்டினி போடப்படுவதற்கு எதிராக சர்வதேச சமூகம் நிற்க வேண்டும் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது. உதவிகள் எந்த கட்டுப்பாடும் இன்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா–ரஷ்யா வாக்குவாதம்

இதேவேளை காசா விவகாரம் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடும் வாக்கு வாதம் வெடித்துள்ளது.

இஸ்ரேல் பட்டினி போர் தந்திரத்தை பயன்படுத்த மேற்குலக சகாக்கள் அனுமதிப்பதாக ரஷ்ய தூதுவர் வசிலி நெபன்சியா குற்றம்சாட்டினார். காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான ஐ.நா முயற்சிக்கு அமெரிக்கா பல முறை வீட்டோவை பயன்படுத்தியதையும் அவர் விமர்சித்தார்.

‘இந்த தாக்குதலின் முன்னெப்போதும் இல்லாத பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அமெரிக்கா முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். அந்த எண்ணிக்கை தற்போது 30,000ஐ நெருங்கியுள்ளது. காசா தொடர்பில் பாதுகாப்புச் சபையில் அமெரிக்க வீட்டோவின் விளைவே இதுவாகும்’ என்று அவர் குறறம்சாட்டினார். இதற்கு பதிலளித்த ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபர்ட் வூட், ‘உக்ரைனிய மக்கள் நாளாந்த காட்டுமிராண்டித்தனமான குண்டு தாக்குதல்கள் மற்றும் கொலைகளை எதிர்கொண்டு வருகின்றனர்’ என்றார்.

காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம் ஒன்று ஏற்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியபோதும் முன்மொழியப்பட்டிருக்கும் போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் அமைப்பு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. எனினும் பைடனின் போர் நிறுத்த எதிர்பார்ப்பை ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் குறைத்து மதிப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு இன்னும் தமது அமைப்புக்கு கிடைக்கவில்லை என்று ஹமாஸ் அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர் ஒருவர் அல் ஜசீனா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

29,954 பேர் பலி

ஐந்து மாதங்களை நெருங்கும் போரில் ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலையில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதியில் ஆரம்பமாகவுள்ள முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 74 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நீடித்துவரும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 29,954 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 70,325 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் கொல்லப்பட்ட பலரின் சடலங்கள் தொடர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது. உயிரிழப்ப எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் மிக அதிகம் என்று இடம்பெயர்ந்த காசா பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘போர் முடியும்போது எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று எமக்குத் தெரியவில்லை’ என்று தெற்கு காசாவில் மக்கள் நிரம்பி வழியும் ஐ.நா தற்காலி முகாமில் அடைக்கலம் பெற்றிருக்கும் 30 வயதான அந்தப் பெண் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

மறுபுறம் காசாவில் தொடர்ந்து எதிர்ப்பை சந்தித்து வரும் இஸ்ரேலிய படையின் மேலும் இரு வீரர்கள் வடக்கு காசாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top