மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமரிடம் எழுப்பிய கேள்விகளால் சபையில் புதன்கிழமை (06) சர்ச்சை ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினர் அதிருப்தியை வெளியிட்டு கருத்துக்களை முன்வைத்த போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அடிக்கடி குறுக்கீடுகளை செய்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் கட்சித் தலைவர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட போதும், அங்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றே எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடிய பின்னர் பிரதமரித்திலான கேள்வி நேரத்தின்போது, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
இதன்போது பிரதமர் அதற்கு பதிலளிக்கையில், தான் விரிவான பதிலை எதிர்பார்ப்பதாக மரிக்கார் எம்.பி கூறியதையடுத்தே சர்ச்சை உருவானது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை சரியானதா என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் தனது மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் மத்திய வங்கியை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
ஆகவே, இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன் என அரசாங்க நிதி தொடர்பாக குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா சபையில் குறிப்பிட்டார்.
இதன்போது சபையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இருந்ததுடன், அவரும் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எதிர்க்கட்சியினர் முன்வைத்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் கட்சித் தலைவர் கூட்டத்துக்கும், அரசாங்க நிதி தொடர்பான குழு கூட்டத்துக்கும் முன்னிலையாகியுள்ளனர்.
அறிக்கை கிடைக்கப்பெற்றதும் விவாதம் நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மாறாக ஹர்ஷ டி சில்வாவின் காலைவாரும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு சபையில் இருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா மத்திய வங்கியின் சம்பள கூட்டு ஒப்பந்தம் தொழில் அமைச்சில் பதிவு செய்யப்படவில்லை.
அது ஒரு குறைப்பாடு என்பதை மத்திய வங்கியிள் ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். சம்பள அதிகரிப்பை தொடர்ந்து மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை குறித்து பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன என்றார்.