யாழில் (Jaffna) நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவமானது நேற்று (17.10.2024) யாழ்ப்பாணம் கோப்பாய் (Kopay) தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது
வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தனக்கு காய்ச்சல் என தெரிவித்து கடந்த 11ஆம் திகதி வீடு திரும்பியிருந்த நிலையில், நேற்று முன்தினம் (16) வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது நிமோனியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் (A. Jayapalasingam) மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பெண் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது .