இந்திய டி20 அணியின் தற்காலிக பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மனை பிசிசிஐ நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அந்த தொடருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே டெஸ்ட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நவம்பர் 5 உடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த தொடரின் பின்னர் அதன் பின் இந்திய டெஸ்ட் அணி அணி நவம்பர் 22 முதல் ஆஸ்திரேலியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்த தொடருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே டெஸ்ட் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா செல்லஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுடன் கவுதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவும் செல்ல உள்ளது. அதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை. கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவும் தங்கள் முழு கவனத்தை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனால், அதிக முக்கியத்துவமற்ற தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மன் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட இருக்கிறார். அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளர்களாக இருக்கும் சாய்ராஜ் பஹுதுலே, ஹ்ரிஷ்கேஷ் கனிட்கர், சுபதீப் கோஷ் ஆகியோர் தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியுடன் பயணிக்கஉள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய அணியில் கவுதம் கம்பீரை தவிர்த்து இரண்டு துணை பயிற்சியாளர்கள், ஒரு பவுலிங் பயிற்சியாளர் மற்றும் ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் உள்ளனர். அபிஷேக் நாயர், ரையன் டென் ஆகிய இரண்டு துணை பயிற்சியாளர்களில் ஒருவர் இந்திய டி20 அணியுடன் தென்னாப்பிரிக்கா செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ அதிரடியாக மற்றொரு பயிற்சியாளர் குழுவை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்ப உள்ளது.
இதன் மூலம், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியம் என்ற எண்ணத்தில் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.