யாழ்.வடமராட்சி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி இருவரது உடலங்கள் நேற்று முன்தினம் (30) மீட்கப்பட்டன.
குறித்த இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை பருத்தித்துறை பொலிஸார் தடுத்து வைத்து அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றன.
அத்துடன் கொலை செய்யப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் 53 வயதுடைய மாணிக்கம் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவியான 54 வயதுடைய சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டனர்.
அத்துடன் அவர்களின் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பசிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பருத்தித்துறை பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் என பல குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மூவரிடம் தொடர் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் ஒருவர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் 28.10.2018 அன்று இடம் பெற்ற இரட்டை கொலை, மற்றும் அவரது மனைவியின் தாயாரையம் கொலை செய்ய முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதுவரை யாரும் உத்தியோக பூர்வமாக கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.