இலங்கையின் வரலாற்றில் அரசியல் வரைபடம் மாற்றமடைந்துள்ளது. பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. இதனையடுத்து புதிய அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு பலமான ஆணையை வழங்கிய அனைத்து மக்களுக்கும் எமது நன்றிகள். பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும். மக்களின் கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் வெற்றியடையச் செய்யும் வகையில் நல்லாட்சி இருக்க வேண்டும்
நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடைத்தது. அதிகாரத்தின் ஊடாக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது. மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. எந்தவொரு அதிகாரம் வழங்கப்பட்டாலும் அதில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
வெற்றி பெரியது, அந்த வெற்றிக்காக நம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகள் சமமானவை. பிரிவினை அரசியல் இனியும் தேவையில்லை என்பதை இத்தேர்தல் நிரூபித்துள்ளது.
இலங்கையின் அரசியல் கலாசாரம் நீண்ட காலமாக வடக்கை தெற்கிற்கு எதிராகவும் அதற்கு நேர்மாறாகவும் நிறுத்தும் முயற்சிகளால் வரையறுக்கப்படுகிறது.
இருப்பினும், பிளவுபடுத்தும் அரசியல் இனியும் ஆட்சி செய்யாது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது. இது அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரே மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்க முயற்சித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய மக்கள் சக்தியின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் தேவை.
இதன்பின்னர் நாம் வெற்றிகரமான முறையில் அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். இலங்கையை மறுமலர்ச்சி யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.