கிளிநொச்சி மாவட்டத்திலே ஊடத்துறையில் பணியாற்றி வருகின்ற முருகையா தமிழ்ச்செல்வன் கடந்த 27ஆம் திகதி இனம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டுள்ளமைக்கு யாழ். ஊடக மன்றம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கடந்த காலங்களிலே குறிப்பாக யுத்த காலத்திலும் அதற்கு பின்னைய காலத்திலும் 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, நில அபகரிப்பு, சட்டவிரோத போதைப்பொருள், அரச முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைத் தனித்துவமாக துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்தவர்.
இவ்வாறு பக்கச் சார்பின்றி துணிச்சலாக செயற்பட்டு வந்த ஊடகவியலாளர் தனது ஊடகப் பணியை முடித்துவிட்டு சென்ற வேளை இனம் தெரியாதவரால் மறிக்கப்பட்டு கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார். இதிலிருந்து அவர் தப்பிச் சென்ற போது அவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் ஊடகப் பரப்பிலேயே அச்சுறுத்தலையும் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வருபவர்களுக்கு விடுக்கப்படுகின்ற சவாலாகவும் இருந்து வருகிறது.
ஊடக பரப்பில் பணியாற்றுபவர்களின் உத்வேகத்தை முடக்குகின்ற இவ்வாறான திட்டமிட்ட செயல்கள் தொடர் கதையாகவே உள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அண்மையில் சில ஊடகவியலாளர்கள் இவ்வாறு 'இனம் தெரியாதோரால் நடாத்தப்படும் தாக்குதல்' என்ற போர்வையில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டனர்.
இருப்பினும் அது தொடர்பில் சட்டம், நீதி, ஒழுங்கு என்கிற விடயங்களை கையாளுகின்ற பல்வேறு தரப்புகளாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படவோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ வழங்கப்படவில்லை.
தற்போது புதிய அரசாங்கம் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்த போதிலும் இவ்வாறான தாக்குதல்கள், மிரட்டல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.