தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இராணுவத்தின் தலையீடு மற்றும் ஆதரவாளர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்த நிலையில் இந்த சம்பவம், தென் கொரியாவின் ஜனநாயக அமைப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ராணுவ சட்டத்தை பிறப்பித்த குற்றச்சாட்டில் ஜனாதிபதி யூன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்று காலை அதிகாரிகள் அவரை கைது செய்யச் சென்றபோது, அவரது இல்லத்தை இராணுவத்தினரும் ஆதரவாளர்களும் முற்றுகையிட்டு, கைது நடவடிக்கையை தடுத்தனர்.
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த பதற்றமான சூழலில், இராணுவத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், ஜனாதிபதி யூனை கைது செய்ய யாரும் முயற்சிக்கக் கூடாது என உறுதியாக கூறினர். இதனால் வேறு வழியின்றி கைது நடவடிக்கையை கைவிட வேண்டிய நிலை ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
ஒரு பக்கம் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு ஜனாதிபதி, மறுபக்கம் அவரை ஆதரிக்கும் இராணுவம் மற்றும் ஆதரவாளர்கள். இந்த சூழலில், தென் கொரியாவின் ஜனநாயகம் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சம்பவம், தென் கொரிய அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.