மன்னார் நீதவான் நீதிமன்றம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கொன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் படுகாயமடைந்தனர். அவர்களில் இரு ஆண்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான சவேரியன் அருள் மற்றும் 42 வயதான செல்வக்குமார் யூட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், படுகாயமடைந்த ஆணொருவர் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னைய இரண்டு ஆண்டுகளாக நொச்சிக்குளம் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதலும் நடைபெற்று இருக்கலாம் என மன்னார் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டின் பின்னணி, குற்றவாளிகளை அடையாளம் காணுதல் மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் எதுவும் உள்ளவர்களிடம் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.