தென் சூடானில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியின் கீழ் நிலை-2 வைத்தியசாலையில் 11வது இலங்கை இராணுவ வைத்திய குழுவினர் தனது சேவையை தொடங்கியுள்ளனர். இது, சர்வதேச அமைதிக்காக இலங்கை வழங்கும் ஒற்றுமை மற்றும் மனிதாபிமான உதவியின் இன்னொரு மைல்கல்லாகும்.
இந்த குழுவின் தலைமையை இலங்கை இராணுவ வைத்திய படையணியின் லெப்டினன் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ மேற்கொள்கிறார், மேலும் லெப்டினன் கேணல் கே.டி.பீ.டி.இ.ஏ. விஜேசிங்க இரண்டாவது கட்டளை அதிகாரியாக உள்ளார். 16 இராணுவ அதிகாரிகள், 2 கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் ஆகியோர் அடங்கிய 64 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு, தென் சூடானில் மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளது.
குழுவினர் புறப்படும் முன்னர், 2025 ஜனவரி 31 வெள்ளிக்கிழமை அன்று, வேரஹெர இராணுவ வைத்திய படையணி தலைமையக மைதானத்தில் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்பட்டது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ரொட்ரிகோ ஆகியோர் முன்னிலையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், இராணுவ வைத்திய படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டகேஎஸ்கே தொலகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த குழுவினரை விமான நிலையத்தில் வழியனுப்புவதற்காக, அவர்களின் குடும்பத்தினர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சக இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது