தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்ட நகைச்சுவை நடிகர் வடிவேலு, பல பிரச்னைகளை கடந்து மீண்டும் திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். ஆனால், சமீபத்தில், நடிகை பிரேம பிரியா வெளிப்படையாக அளித்த பேட்டியில், தனது திரை வாழ்க்கை வளர்ச்சி தடைக்குள்ளானதற்கு வடிவேலுவே காரணம் என கூறியுள்ளார்.
வைகைப்புயல் வடிவேலு, தனது புயல் வேகமான வளர்ச்சியால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். 90களில் கவுண்டமணி-செந்தில் இடையிலான கூட்டணிக்கு மத்தியில் சிறிய கதாபாத்திரங்களின் மூலம் தன்னை காட்டிக் கொண்டார். பின்னர், தனக்கென தனி டீமை உருவாக்கி, தனி ஸ்டைலில் நகைச்சுவை படைத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். சில பிரச்னைகள் காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர், தற்போது மீண்டும் திரையுலகில் பிசியாகி வருகிறார்.
வடிவேலுவின் மீள் வருகை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்க, நடிகை பிரேம பிரியா அளித்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. "என்னுடைய வளர்ச்சி தடைப்பட்டதற்கு காரணம் வடிவேலுதான். நான் பல படங்களில் வாய்ப்பு பெற்றும், ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்தபிறகு நடிக்க முடியாமல் சென்றுவிட்டேன். குறிப்பாக, விஜய்யின் 'சுறா' படத்தின் ஷூட்டிங்கிற்குச் சென்றபோது, 'இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவரை தேர்வு செய்யுங்கள்' என்று வடிவேலு கூறிவிட்டார். இதனால், அந்த வாய்ப்பையும் இழந்தேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்த விஷயங்களை வெளியிடாமல் இருக்க, ஒரு இயக்குநர் தன்னை அழைத்து மறுப்பு வீடியோ வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதை செய்ய மறுத்ததாகவும் பிரேம பிரியா கூறியுள்ளார்.