இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பாக இந்த ஆண்டு எந்தவிதமான வரி மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். இதனால், இந்த ஆண்டில் வாகனங்களின் சந்தை விலைகளிலும் எந்த மாற்றமும் ஏற்படாது என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தொலைகாட்சி நிகழ்வு ஒன்றில் பேசிய அவர்
இந்த ஆண்டில் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்களை இலங்கை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 300 முதல் 350 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிலர் வாகன வரிகள் குறையும் என எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை பொருத்தவரை, இந்த ஆண்டு எந்தவொரு வாகன வரித் தளர்வும் அளிக்கப்படமாட்டாது. எனவே, வாகனங்களை உடனடியாக ஆர்டர் செய்யலாமா அல்லது பின்னர் ஆர்டர் செய்யலாமா என்பது சந்தை நிலைமையைப் பொறுத்து முடிவு செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வாகன வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கியமான தகவலாக உள்ளது. வரி மாற்றம் இல்லாததால், தற்போதைய விலை நிலைமை தொடரும் என்பதுடன், எதிர்கால சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு வாகனக் கொள்முதல் செய்யுமாறு ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர்.