அஜித் குமார், ஆதிக் ரவிச்சந்திரன், மைத்திரி மூவிஸ் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் "குட் பேட் அக்லி". அஜித் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், தனது ஆதர்ச நாயகனை எப்படி திரையில் காட்ட விரும்புகிறாரோ, அப்படியே இந்த படத்தை உருவாக்கியுள்ளார். த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படம், அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமா? மற்றவர்களை கவர்ந்ததா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.
கதைக்களம்:
இந்தியாவின் மிகப்பெரிய கேங்ஸ்டராக வலம் வரும் அஜித், தனது தொழிலின் காரணமாக குடும்பத்திற்கு ஆபத்து நேரும் சூழலில், பிறந்த குழந்தையை கூட பார்க்க முடியாமல் தவிக்கிறார். இதனால் மனம் திருந்தி போலீசில் சரணடையும் அவர், 17 வருடங்களுக்குப் பிறகு தனது பழைய வாழ்க்கையை மறைத்து மகனைப் பார்க்க வருகிறார். ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக, அர்ஜுன் தாஸ் ஏதோ ஒரு காரணத்திற்காக அஜித்தின் மகனை போலீசில் சிக்க வைக்கிறார். இதனால் அமைதியாக இருந்த அஜித், மீண்டும் தனது பழைய "பேட்" அவதாரத்தை எடுக்கிறார். ஏன் அர்ஜுன் தாஸ் தனது சொந்த மகனை ஜெயிலுக்கு அனுப்பினார்? அஜித் தனது மகனை மீட்க போராடினாரா? என்பதே மீதிக்கதை.
படத்தைப் பற்றிய அலசல்:
"குட் பேட் அக்லி" திரைப்படம் முழுக்க முழுக்க அஜித் குமாரின் ஒன் மேன் ஷோவாகவே இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ஆதிக் ரவிச்சந்திரன் மிகவும் ரசித்து எடுத்திருப்பது திரையில் தெரிகிறது. அஜித் ரசிகர்கள் எந்த மாதிரியான நடிப்பை பார்க்க விரும்புகிறார்களோ, அதை அப்படியே கொடுத்திருக்கிறார் அஜித். குறிப்பாக, குட் அப்பாவாக வரும் காட்சிகளில் அனைவரையும் கலாய்த்து ஜாலியாக இருக்கும் அஜித், மகனுக்காக பேட் ஆக மாறும் தருணங்களில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இடைவேளை காட்சியில் வரும் "பேங் ஆ? மொட்டையா?" என்ற வசனம், மங்காத்தா படத்திற்கு பிறகு ஒரு அதிரடியான இடைவேளை காட்சி என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இரண்டாம் பாதியில் வரும் அஜித்தின் ப்ளாஷ்பேக் காட்சிகள் வேற லெவல். டான் லீ, ஜான் விக் போன்ற ஹாலிவுட் படங்களின் ரெஃபரன்ஸ்கள் என ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்தே படைத்துள்ளார். பிரசன்னா, சுனில் போன்ற நடிகர்கள் அஜித்துடன் அவ்வப்போது வந்து, அவரை பில்டப் செய்யும் கதாபாத்திரங்களில் மட்டுமே தோன்றுகிறார்கள். சிம்ரனின் திடீர் என்ட்ரி மற்றும் அதை கையாண்ட விதம் என பல சர்ப்ரைஸ்கள் படத்தில் உள்ளன. அர்ஜுன் தாஸ், அஜித்திற்கு எப்படி வில்லனாக பொருந்துவார் என்ற கேள்விக்கு அவரது நடிப்பு நல்ல பதிலடி கொடுக்கிறது. 2கே கிட்ஸ் அஜித்தை வம்பு இழுக்கும் கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். படம் முழுவதும் ஏதாவது ஒரு அஜித் ரெஃபரன்ஸ் வந்துகொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில், படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பழைய பாடல்களும், அதிகப்படியான சவுண்டும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இதை இன்னும் குறைவாக பயன்படுத்தியிருக்கலாம். லாஜிக் விஷயத்தில் பெரியதாக எதுவும் எதிர்பார்க்க முடியாது. டெக்னிக்கலாக படம் இசை ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தாலும், ஒலி அளவு சில இடங்களில் அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது. ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும், சில காட்சிகள் ஏன் மங்கலாக உள்ளன என்ற கேள்வியும் எழுகிறது.
கிளாப்ஸ்:
- அஜித் குமார் - அவரது அபாரமான நடிப்புக்காக.
- அஜித் குமாரின் ப்ளாஷ்பேக் காட்சிகள் - மிரட்டலான உருவாக்கம்.
- சண்டை காட்சிகள் மற்றும் மாஸ் மொமண்ட்ஸ் - ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
பல்ப்ஸ்:
- அதிகப்படியான ஒலி - சில சமயங்களில் எரிச்சலூட்டுகிறது.
- பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் - ஏற்றுக்கொள்ள முடியாதவை.
மொத்தத்தில் "குட் பேட் அக்லி" திரைப்படம், அஜித் ரசிகர்களுக்கு ஒரு அஜித் ரசிகர் வைத்த அறுசுவை விருந்து. லாஜிக் பார்க்காமல், முழுக்க முழுக்க அஜித்தை ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல என்டர்டெய்னராக இருக்கும்.