ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வூதிய திணைக்களம் நடத்திய நிகழ்வில் கலந்து கொண்ட பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்னா இதனை அறிவித்தார்.
“நாட்டில் தற்போது 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் பலர் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றைத் தீர்க்க அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கை எடுக்கிறது,” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி தொடர்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவரது கூற்றுப்படி,
“2025 பட்ஜெட்டில் சம்பள உயர்வு கிடைக்காத ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்காக, 2026 பட்ஜெட்டில் சிறப்பு நிவாரணங்கள் வழங்கப்படும். இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.”
அமைச்சரின் இந்த அறிவிப்பு, பல மாதங்களாக நிவாரணத்திற்காகக் காத்திருந்த ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.