2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் 301 மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட வாகன இறக்குமதி (தனிப்பட்ட மற்றும் வணிக வாகனங்கள் உட்பட), 2026 ஜனவரியில் 224 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைவடைந்துள்ளது.அதேவேளை, சுற்றுலாத்துறையில் சாதகமான வளர்ச்சி பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் மாதாந்த வருகையை விட, 2026 ஜனவரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 378 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றம் ஜனவரியில் 751 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இந்தநிலையில், அரசாங்க பிணையங்கள் சந்தையில் 17 மில்லியன் அமெரிக்க டொலர் தேறிய முதலீடுகள் உள்வருகையாகப் பதிவாகியுள்ளன.கொழும்பு பங்குச்சந்தையின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை கொடுக்கல் வாங்கல்களில் 22 மில்லியன் அமெரிக்க டொலர் தேறிய வெளிச்செல்லலாகப் பதிவாகியுள்ளது.சீன மக்கள் வங்கியுடனான நாணயப் பரிமாற்று வசதி (Swap facility) உட்பட, 2026 ஜனவரி இறுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.

