இஸ்ரேலை அதிரவைத்த ஈரானின் புதிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் அலறிய அபாய ஒலி - முடங்கியதா வான் பாதுகாப்பு?
மத்திய கிழக்கில் யுத்த பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது சரமாரியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்களால் டெல் அவிவ் (Tel Aviv) உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அபாய ஒலிகள் (Sirens) இடைவிடாது ஒலித்து வருவதுடன், மில்லியன் கணக்கான இஸ்ரேலிய மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
முடங்கியதா இஸ்ரேலிய ராடார் கட்டமைப்பு?
ஈரானியப் படைகள் ஒரே இரவில் குறைந்தது ஆறு பாரிய பலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவியுள்ளன. எனினும், இதில் மிகவும் அதிர்ச்சிகரமான விடயமாக இஸ்ரேலின் அதிநவீன ராடார் கட்டமைப்புக்கள் (Radar Systems) பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளமை சர்வதேச ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலிய ராடார் கட்டமைப்புக்கள் குழப்பமடைந்துள்ளதாகவும், இதனால் ஏவுகணைகள் வருவதை முன்கூட்டியே கணித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நேரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதற்குப் போதுமான கால அவகாசம் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.சிதறி வெடிக்கும் புதிய ஈரானிய ஏவுகணைகள்
ஈரான் தற்போது ஒரு புதிய வகையான ஏவுகணைத் தொழில்நுட்பத்தை இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தி வருவது இஸ்ரேலியப் பாதுகாப்புத் தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த ஏவுகணைகள் தரையை வந்தடையும் போது, அதன் போர்முனைகள் (Fragmented Warheads) பல துண்டுகளாகச் சிதறி வெடித்துப் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சிதறி வெடிக்கும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் பொதுமக்கள் மற்றும் உட்கட்டமைப்புக்களுக்குப் பாரிய சேதங்கள் ஏற்படலாம் என இஸ்ரேலிய இராணுவம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெருசலேமை நெருங்கிய ஹிஸ்புல்லாவின் மாஸ்டர் பிளான்
ஈரானின் தாக்குதல்களுக்கு இணையாக, லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு வளையமான 'அயன் டோமை' (Iron Dome) ஊடுருவித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. தற்கொலை ட்ரோன்கள் இஸ்ரேலின் எல்லைகளைத் தாண்டி பல கிலோமீட்டர்கள் வரை உள்ளே நுழைந்துள்ளமை இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மேலும், ஹிஸ்புல்லா அமைப்பு புதிய நீண்ட தூர ஏவுகணை ஒன்றையும் தற்போது களமிறக்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜெருசலேம் நகருக்கு அருகில் அதிக இராணுவத் தளங்கள் அமைந்துள்ள 'பெயிட் ஷெமேஷ்' (Beit Shemesh) பகுதி மீது இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்தமை, இஸ்ரேலிய மக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
